search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான அபிலாசை பிணம் வீசப்பட்ட ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார்
    X
    கைதான அபிலாசை பிணம் வீசப்பட்ட ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார்

    களியக்காவிளை அருகே சொத்து தகராறில் ராணுவ வீரரை கொன்று ஆற்றில் வீசிய மகன் கைது

    களியக்காவிளை அருகே சொத்து தகராறில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கொன்று ஆற்றில் வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    களியக்காவிளை அருகே உள்ள கேரள மாநில பகுதியான அறயூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினு(வயது41). டிரைவரான இவர் அருகில் உள்ள கடம்பாட்டு கோணம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி(47) என்பவரது தோட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி பிணமாக கிடந்தார்.

    இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குச் சென்று அவரது பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது வினுவை கொலை செய்து பிணத்தை சாக்கில் கட்டி தோட்டத்தில் வீசியது ஷாஜி என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஷாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு அவருக்கு உதவிய நண்பர்கள் பல்லன் அனி, தீபேத்திரகுமார், பத்மகிரிஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    ஷாஜியிடம் போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது தந்தையான கிருஷ்ணனை சொத்து தகராறில் ஷாஜி ஏற்கனவே கொலை செய்ததும், அந்த கொலைக்கு வினு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

    தந்தையை ஷாஜி கொலை செய்ததை போலீசில் சொல்லாமல் இருக்க அவரிடம் பணம் கேட்டு வினு மிரட்டியதால் அவரை ஷாஜி கொலை செய்த தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.

    கொலையுண்ட கிருஷ்ணன் ராணுவ வீரராக பணியாற்றியவர். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊரான அறயூர் திரும்பி அங்கு வசித்து வந்தார். அப்போது தந்தையிடம் மகன் ஷாஜி அடிக்கடி தனக்கு சொத்தை எழுதி தரும்படி கேட்டு தகராறு செய்து வந்தார். ஆனால் அதற்கு கிருஷ்ணன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஷாஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிருஷ்ணனை கடத்தி சென்று மிரட்டி சொத்துக்களை தனது பெயருக்கு எழுதி வாங்கினார்.

    ஆனால் கிருஷ்ணன் தனது மகன் ஷாஜி தன்னை மிரட்டி சொத்தை எழுதி வாங்கி கொண்டதால் அது செல்லாது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்றால் தந்தை உயிரோடு இருக்கக்கூடாது என்று முடிவு செய்த ஷாஜி, அதற்காக கொலை திட்டத்தையும் தீட்டினார்.

    அதன்படி ஷாஜி தனது நண்பர்களான வினு அறயூர் பகுதியைச் சேர்ந்த இன்னொரு நண்பரான அபிலாஷ் என்ற அப்புக்குட்டன் ஆகியோருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர்கள் 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை கொலை செய்து அவரது உடலை அருமனை அருகே ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் வீசி விட்டுச் சென்று விட்டனர்.

    2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி இந்தக் கொலை நடந்து உள்ளது. அப்போது கிருஷ்ணனின் பிணத்தை கைப்பற்றிய அருமனை போலீசார் எந்த துப்பும் துலங்காததால் கிருஷ்ணன் உடலை அனாதை பிணம் என்று போலீசார் அடக்கம் செய்து விட்டனர். இந்த நிலையில் இந்த கொலை பற்றி போலீசில் சொல்லாமல் இருக்க ஷாஜியிடம் பணம் கேட்டு வினு மிரட்டி வந்தார்.

    மேலும் அவரை தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து காரில் கடத்தி சென்று தாக்கி உள்ளார். தொடர்ந்து வினு பணம் கேட்டு மிரட்டி வந்ததால் அவரையும் ஷாஜி கொலை செய்து விட்டார். அதன் மூலம் அவர் தனது தந்தையை கொலை செய்த தகவலும் வெளியாகி உள்ளது.

    கிருஷ்ணன் கொலை வழக்கில் ஷாஜிக்கு உடந்தையாக இருந்த அபிலாஷ் என்ற அப்புக்குட்டன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அப்புக்குட்டனை பாறசாலை போலீசார் கைது செய்தனர்.

    பிறகு அவரை கிருஷ்ணன் பிணம் வீசப்பட்ட அருமனை, தேமானூர் ஆற்றுப்பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணத்தை ஆற்றில் வீசியது எப்படி? என்பது பற்றி அவர் போலீசாரிடம் நடித்து காட்டினார்.

    9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் தற்போது துப்பு துலங்கி உள்ளதை தொடர்ந்து கிருஷ்ணனின் பிணத்தை தோண்டி எடுத்து தடயவியியல் பரிசோதனைக்கு உட்படுத்த கேரள போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது 2 மாநில போலீசார் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் குமரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கிருஷ்ணனின் பிணத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் பாறசாலை போலீசார் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×