search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள 19-வது வார்டு பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு திருக்கோவிலூரில் உள்ள மணிமுக்தாற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும். அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிக்கு சென்று அங்குள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிநீருக்கு பயன் படுத்தி வந்தனர்.

    தண்ணீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு காலிகுடங்களுடன் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சித்தேரி சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி நகராட்சி மேற்பார்வையாளர் கோபி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக சரிவர தண்ணீர் வருவதில்லை. இதனால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்வெளிகளில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறோம்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.

    அதற்கு போலீசார் உங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மறியல் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அதன்பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×