search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க கரம் கோர்ப்போம்- வைகோ அறிக்கை
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க கரம் கோர்ப்போம்- வைகோ அறிக்கை

    ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க நடைபெற உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் அறவழிப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு, காவல் துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்துகிறது.

    காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1இல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தங்கள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

    காவிரி பாசனப் பகுதி வேளாண் மண்டலத்தைப் பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் ஜூன் 23-ந்தேதி மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஜூன் 23-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவு வரை மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அலை அலையாக பங்கேற்க வேண்டும்.

    மரக்காணத்தில் மனிதச் சங்கிலியில் நானும் இணைகிறேன். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்திட ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×