search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவமழை பெய்தால் மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் திறப்பு - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்
    X

    பருவமழை பெய்தால் மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் திறப்பு - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

    பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் திறந்து விட்ட தண்ணீர் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழுவதுமாக வறண்டு விட்டதால் சென்னை அருகே உள்ள கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், பாலாறு மண்டல முதன்மை பொறியாளர் கணேசன் ஆகியோரின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழு 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தலைநகரம் அமராவதிக்கு சென்றனர்.

    அவர்கள் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் தற்போது கண்டலேறு அணையில் 4. 45 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக ஆந்திரா அதிகாரிகள் கூறி விட்டனர்.

    பருவ மழை பெய்து அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் என்று கூறிவிட்டதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணா நதி கால்வாய் பராமரிப்பு பணிகளுக்கு தமிழக அரசு வருடந்தோறும் ஆந்திர அரசுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்.

    இந்த பராமரிப்பு தொகை கடந்த 10 வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்த நிலுவைத் தொகையில் உடனடியாக ரூ.50 கோடி செலுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் எப்படியாவது கிருஷ்ணா நதி நீரை பூண்டிக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஆந்திர நீர்பாசனத்துறை மந்திரி அனில்குமார் பார்வைக்கு கொண்டு செல்வதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கூறியதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினர்.
    Next Story
    ×