search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
    X

    தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

    தென்மேற்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார்.
    மேட்டுப்பாளையம்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    தென்மேற்கு பருவமழை சற்று பொய்த்ததாகவும், மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதாகவும் மக்கள் மத்தியில் ஒரு அச்சம், பீதி நிலவி வருகிறது. மழை பெய்து தொடர்ந்து நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு உயருமா, போதிய நீரின் அளவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.

    யாரும் பீதி அடைய வேண்டாம். யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். தென்மேற்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் பெய்யும். அண்மையில் ஏற்பட்ட காற்றின் திசை மாற்றம் புயலின் தாக்கம் இவற்றின் காரணமாக பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் மீண்டும் சீர்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    எனவே கண்டிப்பாக நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் பொழிய தொடங்கும்.

    கேரளாவிலும் அதிகளவில் மழை பெய்யும். கோவை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்து சிறுவாணி நீர்மட்டம் உயரும். இதன்மூலம் வேளாண்மை தொழில் சிறப்பான முறையில் நடைபெறும்.

    விவசாயிகள், பொதுமக்கள் இதுதொடர்பாக எந்தவிதமான அச்சமும் கொள்ள வேண்டாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    கடந்தாண்டை விட இந்தாண்டு 7 ஆயிரம் மாணவர்கள் அதிகளவில் இளங்கலை படிப்பிற்கு சேர விண்ணப்பித்துள்ளனர். 52 ஆயிரம் பேர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.



    வேளாண்மை கல்வி பயில அதிகளவில் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெண்கள் அதிகளவில் உள்ளனர். இது வேளாண்மை மீது அதிக நம்பிக்கையை தருகிறது.

    வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தர வரிசை பட்டியல் ஜூன் மாதம் 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. மருத்துவ கல்லூரியின் முதலாவது கவுன்சிலிங் முடிந்தவுடன் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் தொடங்கும். ஆகஸ்ட் 2-வது வாரத்திற்கு கல்லூரியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×