search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு திமுக போராட்டம் - 600 பேர் கைது
    X

    குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு திமுக போராட்டம் - 600 பேர் கைது

    குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட 600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    சீரான முறையில் குடிநீர் வழங்க கோரியும், வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் மாநகராட்சி முன்பு இன்று காலை திரண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் காலிகுடத்துடன் வந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் பேரி கார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். தி.மு.க. போராட்டம் காரணமாக டவுன் ஹால் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து போராட்டம் நடத்திய கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, சி.ஆர். ராமச்சந்திரன் உள்பட 600-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றிசென்று நல்லயான் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இது குறித்து கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியதாவது-

    கோவையில் பல இடங்களில் மாதத்துக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. குடிநீர் வினியோகமும் சரியில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். வறட்சி, தண்ணீர் பிரச்சினை என்று முன்கூட்டியே தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    கோவையில் குடிநீர் விநியோக உரிமையை தனியாருக்கு தாரைவார்த்து உள்ளனர். இதனையும் கண்டிக்கிறோம். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.
    Next Story
    ×