search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகதுருகம் அருகே குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
    X

    தியாகதுருகம் அருகே குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீர் வழங்க கோரி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    கண்டாச்சிமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராம மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க நிர்வாகிகள், புரட்சிகர இளைஞர் இயக்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலாளர் மணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் பிரச்சனைக்கு வருகிற 25-ந்தேதிக்குள் தீர்வு காணப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தெரிவித்தார். இதை ஏற்ற போராட்டக்காரர்கள், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×