search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகார்
    X

    எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகார்

    எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் ரஜினிகாந்த் நடித்த 2.0, விஜய் நடித்த சர்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார்.

    இவர் கடந்த 14-ந் தேதி இரவு பார்வதிபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தோசை மாவு வாங்கினார். அந்த மாவு புளித்துப்போய் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஜெயமோகன், மளிகைக்கடைக்கு வந்து அந்த தோசை மாவு பாக்கெட்டை திருப்பிக் கொடுத்தார்.

    அப்போது ஜெயமோகனுக்கும், கடை உரிமையாளர் செல்வத்துக்கும் (51) மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜெயமோகன், வடசேரி போலீஸ் நிலையத்தில் கடைக்காரர் செல்வம் மீது புகார் செய்தார். அதுமட்டுமல்லாமல் செல்வம் தாக்கியதில் தான் காயம் அடைந்ததாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் செய்துள்ளனர். நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தை சந்தித்து வியாபாரிகள் அந்த மனுவை கொடுத்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மீட்டர் வட்டி, கட்டப்பஞ்சாயத்து, வங்கிகளின் நடவடிக்கை, மாநகராட்சி நடவடிக்கை போன்றவற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் பார்வதிபுரத்தில் வியாபாரம் செய்து வரும் செல்வத்தின் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த 14-ந் தேதி 2 பாக்கெட் தோசை வாங்கிச் சென்றுள்ளார். பிறகு மாவு புளிக்கிறது என்று கூறி அதனை திருப்பிக் கொடுக்க அவர் சென்றபோது செல்வத்தின் மனைவி கீதா அங்கிருந்துள்ளார்.

    அவரிடம் ஜெயமோகன் தகாத முறையில் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் மாவு பாக்கெட்டையும் அவரது முகத்தில் வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம் அதை தட்டிக்கேட்டபோது அவரையும் ஜெயமோகன் தாக்கி இருக்கிறார். இந்த தவறை மறைப்பதற்காக ஜெயமோகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    ஜெயமோகன் மீது கீதா கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை. எனவே அந்த புகாரை விசாரித்து ஜெயமோகனை கைது செய்ய வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செல்வத்துக்கும், அவரது மனைவி கீதாவுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், செயலாளர் நாராயண ராஜா, பொருளாளர் ஜேம்ஸ் மார்‌ஷல் மற்றும் நிர்வாகிகள் கொடுத்தனர்.

    Next Story
    ×