search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி நடந்த குழந்தை திருமணம்
    X

    நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி நடந்த குழந்தை திருமணம்

    நிலக்கோட்டை அருகே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமனம் மீண்டும் நடந்தது. திருமணம் முடிந்த 8 நாளில் சிறுமி தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் உமேஷ் பாண்டி (27). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 6-ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. அந்த சிறுமி சென்னையில் படித்து வந்த நிலையில், இந்த திருமண ஏற்பாட்டினை விரும்பவில்லை.

    இதனிடையே திருமண ஏற்பாடு குறித்து குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக நலத்துறை குழுவினர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

    ஆனால், திருமண ஏற்பாடுகளை கைவிட்டுவிட்டதாகவும், மீண்டும் படிக்க வைக்கப்போவதாகவும் அவரது உறவினர்கள் எழுதிக்கொடுத்துவிட்டு சிறுமியை 4-ந் தேதி அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி, கடந்த 6-ந்தேதி அந்த சிறுமியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8 நாட்களாக உமேஷ் பாண்டி வீட்டில் அந்த சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தார்.

    இதனிடையே உமேஷ் பாண்டி நெருங்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி, அந்த சிறுமி தன்னை பாதுகாத்து வந்துள்ளார். 8 நாட்கள் அமைதி காத்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்.

    இந்த நிலையில் பாண்டி வெளியே சென்றதை அறிந்து, வீட்டுக் காவலில் இருந்து தப்பினார். பின்பு, செம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அவரை மீண்டும் குழந்தைகள் நலக்குழுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த சிறுமி, தற்போது அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தடுத்து நிறுத்திய குழந்தை திருமணத்தை மீண்டும் நடத்திய பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில் வழக்குப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
    Next Story
    ×