search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
    X

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இன்று தூத்துக்குடி குறுக்குச் சாலையில் தொடங்கி மீனாட்சிபுரம், பசுவந்தனை, தீத்தாம்பட்டி, அச்சங்குளம், குருவிநத்தம், காமநாயக்கன்பட்டி, துறையூர், சிவந்திபட்டி, கரிசல்குளம், பாண்டவர் மங்கலம், மந்தித்தோப்பு, நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, கழுகுமலை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு வழங்க உள்ளோம். அனைத்து இடங்களிலும் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதற்கு அரசு நிரந்தர தீர்வு எதுவும் காணாத நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டங்களை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினையை நாம் பெரிய அளவில் குறைக்கலாம்.

    அ.தி.மு.க.வை என்றுமே நாங்கள் திராவிட இயக்கமாக ஏற்றுக் கொண்டதில்லை. திராவிட இயக்கத்தின் எந்தகருத்துக்களிலும் நம்பிக்கை இல்லாமல்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க.வை திராவிட இயக்கம் என்று யாருமே ஏற்றுக் கொண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாண்டவர் மங்கலத்தில் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் பேசுகையில், ‘தி.மு.க. மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து, நீங்கள் எங்களுக்கு அளித்திருக்கக்கூடிய ஆதரவிற்கும், உங்களுடைய வாக்குகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வசிக்கும் மக்களுக்கு பல கோரிக்கைகள் இருக்கிறது. முதியோர், விதவை ஆகியோருக்கு அரசு உதவித் தொகை கிடைக்கவில்லை என்றும், அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில் மாவட்ட கலெக்டரை சந்தித்து உங்களுடைய மனுக்களை அவரிடம் வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்ற செய்ய வேண்டும் என்று நிச்சயமாக வலியுறுத்துவேன், விரைவிலேயே திராவிட கழக ஆட்சி இங்கு வந்து விடும், அப்போது நமது கோரிக்கையை இன்னும் விரைவாக நிறைவேற்ற முடியும். பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய ஒருவராக பணியாற்றுவேன். இங்கு கூடிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உங்களோடு நின்று பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்’ என்றார்.

    முன்னதாக கனிமொழி எம்.பி. அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் உடன் இருந்தார்.

    கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டிக்கு நேற்று கனிமொழி எம்.பி. வந்தார். அவருக்கு வானரமுட்டி ஊராட்சி கழக செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான மாரியப்பன் தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள கொடிக்கம்பத்தில் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, இளைஞரணி சார்பில் அருண், வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பாண்டி, அய்யனார், மாரியப்பன், லட்சுமண தேவர், பேயாண்டி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி கழக செயலாளர் மாரியப்பன் செய்திருந்தார்.

    Next Story
    ×