search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்றால் 1000 ரூபாய் அபராதம்
    X

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்றால் 1000 ரூபாய் அபராதம்

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. முதலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றை பயன்படுத்துவது குறைந்தாலும் பிறகு அதனை பயன்படுத்து வது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன் பாட்டை தடை செய்ய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதமாக இந்த குழுக்கள் கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது.

    கடந்த 6 மாதங்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 242 டன் அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக தி.நகரை உள்ளடக்கிய கோடம்பாக்கம் மண்டலத்தில் 55 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, இருப்பு வைத்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து இருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்தது.

    குறிப்பாக சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை மீண்டும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுச்சேரி, குஜராத் மாநிலங்களில் இருந்து இந்த பிளாஸ்டிக் பைகள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை தொடங்க உள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒரு நிறுவனம் தயாரித்தால் முதல் தடவை ரூ.1 லட்சம், 2-வது தடவை ரூ.2 லட்சம், 3-வது தடவை ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் அந்த நிறுவனம் சீல் வைத்து மூடப்படும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்தாலோ அல்லது ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து சென்றாலோ முதல் தடவை ரூ.25 ஆயிரம், 2-வது தடவை ரூ.50 ஆயிரம், 3-வது தடவை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

    பெரிய வணிக நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் முதல் தடவை ரூ.10 ஆயிரம், 2-வது தடவை ரூ.15 ஆயிரம், 3-வது தடவை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரிய வந்தால் நிரந்தரமாக அந்த வணிக நிறுவனம் மூடப்படும்.

    நடுத்தர வணிக நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால், முதலில் ரூ.1000, 2-வது தடவை ரூ.2000, 3-வது தடவை ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் முதல் தடவை ரூ.100, 2-வது தடவை ரூ.200, 3-வது தடவை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    அதன் பிறகும் சிறிய கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு சென்னையில் உள்ள மாநகராட்சி வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.

    கடைகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான உத்தரவு இன்று (வெள்ளிக் கிழமை) அந்த குழுக்களுக்கு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    Next Story
    ×