search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலுவை-நிவாரணம் வழங்காவிட்டால் கரும்பு விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்: கே.எஸ்.அழகிரி
    X

    நிலுவை-நிவாரணம் வழங்காவிட்டால் கரும்பு விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்: கே.எஸ்.அழகிரி

    ரூ.500 கோடி நிலுவை மற்றும் நிவாரணம் வழங்காவிட்டால் கரும்பு விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைக்கு எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனியார் துறையில் 25, பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறையில் 18 என மொத்தம் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் பணியாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும், 5 லட்சம் விவசாயிகளும் சம்மந்தப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதால் 8 தனியார் கரும்பு ஆலைகளும், ஒரு கூட்டுறவு கரும்பு ஆலையும் நடப்பாண்டில் கரும்பு பிழிவதை நிறுத்தியிருக்கிறது. மற்ற கரும்பு ஆலைகள் தங்களது பிழி திறனில் மூன்றில் ஒரு பங்கு தான் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான தனியார் கரும்பு ஆலைகள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கவலைப்படாமல் கட்சியை நடத்துவது ஒற்றைத் தலைமையா ? இரட்டை தலைமையா ? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    கரும்பு ஆலைகள் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிற அதேநேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூபாய் 500 கோடிக்கு மேலாக இருக்கிறது. இதை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை தமிழக அரசு நேரிடையாக விவசாயிகளுக்கு வழங்கினால் அதை கடனாக திரும்ப செலுத்துவதற்கு கரும்பு ஆலைகள் தயார் எனக் கூறியும் இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழகத்தில் சர்க்கரையின் தேவை 18 லட்சம் டன்னாக இருக்கிறது. ஆனால், உற்பத்தியோ 8.4 லட்சம் டன்னாக தான் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று பற்றாக்குறை மாநிலமாக மாறிவிட்டது. பொது விநியோகத்துறை நுகர்வோருக்கு சர்க்கரை வழங்க வெளிமாநிலங்களில் கையேந்த வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. கரும்பு விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் பின்னோக்கி தள்ளப்பட்டதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம்.

    கரும்பு விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு கடன் நிவாரணம் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையெனில் கரும்பு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×