search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.
    X
    விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    தியாகதுருகம் அருகே விபத்து- லாரி மீது ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே இன்று காலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கோவை பகுதியை சேர்ந்த செல்வம்(வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் பகுதியில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

    இதில் பஸ்சின் முன்இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகலூரை சேர்ந்த வினோத்குமார்(40), ஈரோடு பகுதியை சேர்ந்த முகமது ஜூன்பர்(35) மற்றும் ஒரு வாலிபர் உள்பட 3 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.

    மேலும் பஸ்சின் இடிபாட்டுக்குள் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×