search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டி- மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல்
    X

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டி- மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல்

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சென்னை:

    நடைபெற்று முடிந்த பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்திருந்தது. பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் என 10க்கும் மேற்பட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்தித்தது.

    38 பாராளுமன்ற தொகுதிகளில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. கூட்டணி கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

    இதேபோல் 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான பிரசாரம் வலுவாக இருந்ததால் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததை மக்கள் விரும்பவில்லை என்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பலர் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அ.தி.மு.க. வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதங்கத்துடன் தனது கருத்தை கூறி இருந்தார். இதே கருத்தை தலைமை கழக நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.

    தேர்தலுக்கு முன்பு வரை பா.ஜனதா அரசை குறை கூறிக் கொண்டு அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது எந்த வகையில் நியாயம் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் கட்சி கூட்டங்களில் பேசி வருகின்றனர். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இன்னும் 3 மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று இப்போது மாவட்டச் செயலாளர்களும் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் அக்கட்சிக்கு மாநகராட்சி, நகராட்சி சிலவற்றை ஒதுக்கி கொடுக்க வேண்டும். அங்கு பா.ஜனதா ஜெயிப்பது கடினம். தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றுவிடும்.

    எனவே மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெறாமல் இருக்க வேண்டுமானால் அ.தி.மு.க. போட்டியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

    ஒருமுறை தோற்றது போதும், மீண்டும் அ.தி. மு.க. வீறு கொண்டு எழ வேண்டுமானால் தனித்து நின்றால்தான் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்கையில் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார். வெற்றி வாய்ப்புக்கு ஏற்ப முடிவை மேற்கொள்வார்கள் என்றார்.

    Next Story
    ×