search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    தமிழகம் முழுவதும் அணைகள் வறண்டதால் தண்ணீர் பஞ்சம்

    தமிழகத்தில் அணைகள் வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
    நெல்லை:

    தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக கருதப்படுவது தாமிரபரணி நதியாகும். இது நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதன் நீளம் சுமார் 126 கிலோ மீட்டர். இதற்கிடையில் தாமிர பரணிக்கு பல கிளையாறுகள் வந்து சேர்கின்றன. காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு என பல துணை ஆறுகள் சேர்ந்ததே தாமிரபரணி இந்த துணை ஆறுகளுக்கு பிரதானமாக விளங்குவது இங்குள்ள அணைக்கட்டுகள்.

    பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் இரண்டு மட்டுமே தலா 55 டி.எம்.சி. தண்ணீர் அளவை கொண்டுள்ளது. பாபநாசம் அணை 143 அடியையும், மணிமுத்தாறு அணை 118 அடியையும் கொண்டது. ஆனால் தற்போது பாபநாசத்தின் அணை நீர்மட்டம் 9.20 அடி மட்டுமே உள்ளது. மணிமுத்தாறு அணையில் 66.02 அடியும், சேர்வலாறு அணையில் 47.18 அடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதன் துணை அணைகள் என்று கூறப்படும் சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணை, குண்டாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய துணை அணைகளின் மொத்த கொள்ளளவு வெறும் 3 டி.எம்.சி. மட்டுமே. இந்த 11 அணைகளிலும் தற்போது 1¼ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

    இந்த தாமிரபரணியை நம்பி 4 மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மக்கள் வாழ்கின்றனர். பிரதான அணையான பாபநாசம் அணையில் தற்போது வெறும் 9 அடி மட்டுமே தண்ணீர் கொண்டுள்ளது. அதுவும் சேரும் சகதியுமாகவே உள்ளது. இதனால் அணை முழுவதும் திறந்த பிறகும் வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர்மட்டும் லேசாக வருகிறது. தண்ணீர் அடிமட்டத்திற்கு சென்று விட்டதால் பாபநாசம் நீர்மின்நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. அகஸ்தியர் அருவியில் வழக்கத்தைவிட குறைந்த அளவிலே தண்ணீர் விழுகிறது.

    பாபநாசம் அணை

    எப்போதும் பாபநாசம் கோவில் படித்துறையில் ஆயிரக்கணக்கானவர்கள் குளித்து செல்ல தண்ணீர் வெள்ளமாக போகும். ஆனால் படித்துறை பகுதி தண்ணீரின்றி காணப்படுகிறது. ஆற்றிலும் மிக குறைவாக தண்ணீர் ஓடுவதால் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

    குடிநீருக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையில் தற்போது 66 அடி தண்ணீர் உள்ளதே நெல்லை மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உதவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் தண்ணீரின் தேவை மேலும் அதிகரிக்கும். மணிமுத்தாறு தண்ணீரும் காலியாகிவிட்டால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அபாயம் ஏற்படும்.

    தென்மேற்கு பருவமழை இந்தமாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் முதல் பகுதியில் பெய்தால் மட்டுமே குடிதண்ணீர் பஞ்சம் ஏற்படாமலும், விவசாய பணிகள் தொடங்க சாதகமாகவும் இருக்கும். தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டால் தென்மாவட்ட மக்களின் நிலை பரிதாபமாகிவிடும்.

    குமரி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே அங்கு தண்ணீர் தேக்கப்படவில்லை. தற்போது அணையில் 1.90 அடி தண்ணீரே உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 48 அடியாகும்.

    பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 அடி. இன்று காலை நிலவரப்படி அணையில் 23.40 அடி தண்ணீரே உள்ளது. சிற்றாறு அணைகளின் கொள்ளளவு 18 அடியாகும். சிற்றாறு1-ல் 5.25 அடியும், சிற்றாறு2-ல் 5.34 அடியும் தண்ணீர் உள்ளது.

    மாம்பழத்துறையாறு அணையின் கொள்ளளவு 54.12 அடி. அணையில் இப்போது 42.24 அடி தண்ணீர் உள்ளது. பொய்கை அணையின் கொள்ளளவு 42.65 அடி. இந்த அணையில் இப்போது 9.20 அடி தண்ணீரே உள்ளது.

    அணைகளின் நீர் மட்டம் குறைந்து விட்டதால் குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது.

    குமரி மாவட்டத்தில் பெரும்பாலான நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிநீருக்காக காலிகுடங்களுடன் அலைகிறார்கள்.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் கொள்ளளவு 25 அடியாகும். இங்கு தண்ணீர் மட்டம் குறைந்து இப்போது மைனஸ் 10 அடியாக உள்ளது. இதனால் நாகர்கோவில் நகரில் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கோட்டார், வடிவீஸ்வரம், செட்டிகுளம், பீச் ரோடு, பார்வதிபுரம் பகுதிகளில் ஷிப்டு முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. 2 வாரங்களுக்கு ஒரு முறை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தின் 75 சதவீத குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கிறது. தண்ணீர் இருக்கும் 25 சதவீத குளங்களும் விரைவில் நீர் வற்றும் நிலையில் உள்ளது.

    மதுரை மாநகர் பகுதிக்கு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    இருப்பினும் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து நாள்தோறும் 60 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சப்ளை சரியாக இல்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது.

    இதே போல் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், மேலூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக்குடிநீரையே நம்பி உள்ளனர். வறட்சி மாவட்டமான இங்கு கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    தினமும் ஒரு குடம் தண்ணீருக்காக பெண்கள் பல கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீரும் சரியாக வினியோகிக்கப்படாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    விருதுநகர் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வறட்சி காரணமாக 10 நாட்கள் அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக ஏரிகள் வறண்டு விட்டன. சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்திலும் மழை இல்லாததால் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. ஒரு குடம் ரூ.10 முதல் ரூ.25 வரை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், மானாமதுரை, சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை இல்லாததால் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் கேசரிகுலஅள்ளி, தொப்பையாறு, வாணியாறு, வரட்டாறு, நாகாவதி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 7 அணைகளும் வறண்டு காணப்படுகின்றன.

    அதில் இருந்து எந்த ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் அனைத்து ஏரிகளிலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தவித்து வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீரையும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2 வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    Next Story
    ×