search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டது
    X

    15 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டது

    செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது. 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் தற்போது வறண்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி ஏரிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

    மொத்தம் 6303 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. ஏரியில் 3645 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். நீர்மட்டம் 24 அடி ஆகும்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்ததால் அங்கு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.

    குளம் போல் ஆங்காங்கே தேங்கி இருந்த சிறிதளவு தண்ணீர் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு தினமும் 6 கனஅடி வீதம் அனுப்பப்படுகிறது.

    அதுவும் சில நாட்களில் தண்ணீரில் அதிக அளவு மண் கலந்து வந்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் வறண்டு இருந்தது. தற்போது 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் வறண்டு உள்ளது.

    இதேபோல் ஏற்கனவே சோழவரம் ஏரி வறண்டு விட்டது. அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியில் 153 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231) மி.கன அடி) புழல் ஏரியில் 57 மி.கன அடியும் (3,300 மி.கனஅடி) தண்ணீர் இருக்கிறது.

    இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும் இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏரிகள் முழுவதும் வறண்டு வருவதால் தண்ணீர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்க விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீர், கூடுதலாக எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியை ரூ. 191 கோடிக்கு முழுவதுமாக தூர்வார ஆழப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின்படி 6,303 ஏக்கர் பரப்பளவுக்கும், ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்படும்.

    6 ஆண்டுகள் இந்த பணியை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் முழு கொள்ளளவிலும் தூர்வார முடியாது என்பதால் பகுதி பகுதியாக பணி செய்யப்படும். தூர்வாரும் பணியில் மொத்தம் ஒரு கோடியே 51 லட்சத்து 80 ஆயிரத்து 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

    இதன் மூலம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மி.கனஅடிக்கு மேல் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் கோடை காலத்தில் கூடுதலாக சில மாதங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

    தற்போது புழல் ஏரியில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் உடனடியாக பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×