search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்?- போலீசார் விசாரணை
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்?- போலீசார் விசாரணை

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போனில் மர்ம நபர் பேசினார். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில், திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோவில், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது கோவில் வளாகங்களில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்யப்பட்டது. மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.

    கோவில் சன்னதிகள், பக்தர்கள் செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. நேற்று சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெடிகுண்டு சோதனையால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதனிடையே பெருமாள் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக போனில் கூறிய மர்ம நபர் யார்? அவர் எதற்காக மிரட்டல் விடுத்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போன் எண்ணை வைத்து போனில் பேசிய நபர் எங்கிருந்து பேசினார் என்று கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×