search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தும் படத்துடன் பிரசாரம் செய்யக்கூடாது - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
    X

    அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தும் படத்துடன் பிரசாரம் செய்யக்கூடாது - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

    அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ParliamentaryElection
    ஊத்துக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை முறைகளை பற்றி விவரிக்கும் சிறப்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்யும் போது அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டும் இருக்க வேண்டும்.

    ஆனால் பிறகட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சொந்த வாழ்கை பற்றிய விமர்சனங்கள், நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகள், மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனம் கண்டிப்பாக செய்யக்கூடாது.

    மேலும் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். வாக்குகளை பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக்கூடாது.

    தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாற்றம் செய்தல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு உதவி தேர்தல் அலுவலர் பார்வதி தெரிவித்தார்.

    இதில் துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் அனுமந்த், மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentaryElection
    Next Story
    ×