search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்கில் 4 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
    X

    வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்கில் 4 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

    தேன்கனிக்கோட்டை அருகே வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்கில் 4 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த நாராயணப்பா - சீத்தம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் சுஜாதா(26). திருமணமாகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சுஜாதா கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பில்லப்பா மகன்களான முனிராஜ்(21), ராமமூர்த்தி(22) ஆகியோர், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுஜாதாவை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.

     இது குறித்து அவரது அம்மா சீதம்மாள், தேன் கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பாலியல் பலத்காரம் செய்த குற்றத்திற்காக முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

    இதேபோல் தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது வாய் பேச முடியாத ஊமை மகள் நஸ்ரீன்(20). இவர் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காலை 8 மணிக்கு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். 

    அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த வீரேந்திரன்(27), அவரது நண்பரான சந்தோஷ்(22) ஆகிய இருவரை அந்த பெண்ணை வலுகட்டாயமாக வீரேந்திரன் வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். 

    இது குறித்து நஸ்ரீனின் அம்மா பபிதா தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரேந்திரன், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் வீரேந்திரன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

    இந்த இருவழக்கிலும் சிறைத்தண்டனை பெற்ற 4 இளைஞர்களையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 
    Next Story
    ×