search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை - பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
    X

    மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை - பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

    மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். #PMModi #AIIMS
    மதுரை:

    டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது.

    இங்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க பல்வேறு இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.



    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    இதே விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறது.

    விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பா.ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார்.

    அதன் பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம் முதல் விழா திடல் வரை அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பா.ஜனதா மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

    தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வந்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா திடல்களை ஆய்வு செய்தனர்.

    அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMS


    Next Story
    ×