search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்
    X

    வங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் 15, 16ந்தேதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடுமையான பேரழிவை ஏற்படுத்தியது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது.



    அதே போன்ற ஒரு புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

    அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் புயல் உருவானது. இதற்கு தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டியுள்ளது.

    தற்போது இந்த புயலானது சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

    6 மணி நேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும். அன்று மாலை வரை சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். அதன் பிறகு வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும். ஆந்திராவின் நெல்லூர், கவாலி, சிராலா, மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக செல்லும்.

    17-ந்தேதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகிறது.

    நாளை (15-ந்தேதி) தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் 16-ந்தேதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கடந்த 3 நாட்களாக வானிலை மையம் அறிவுறுத்தி வருகிறது.

    தமிழக கடற்கரை பகுதிகளில் தற்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாளை தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும், நாளை மறுநாள் (16-ந் தேதி) பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் புயல் திசை மாறி ஆந்திரா பக்கம் செல்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை. 15-ந்தேதி மிதமான மழையும், 16-ந்தேதி பலத்த மழையும் மட்டுமே இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BayofBengal #Rain #Storm

    Next Story
    ×