search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் - நல்லகண்ணு
    X

    கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் - நல்லகண்ணு

    ‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான நல்லகண்ணு கூறினார். #GajaCyclone #Nallakannu
    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா‘ புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள தென்னைமரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. மக்கள் வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை 25 ஆண்டுகள் பின்னால் தள்ளிவிட்டது என்று தெரிவிக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு ஒரு சோதனையான காலம்.

    தமிழக முதல்-அமைச்சர் 5 நாட்களுக்கு பிறகு தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டுள்ளது. அது போதாது. மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதனால் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு குழு வந்துள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடுகிறார்கள். இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். அந்த மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஆணவ கொலைகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், நிவாரண உதவியும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஆணவ கொலைகள் அதிகமாக இருக்கிறது என்று கூறினோம்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் அதெல்லாம் இல்லை என்று கூறினார். அவர்களுக்கு இப்போதாவது புரிய வேண்டும். எனவே தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு நல்லகண்ணு கூறினார். #GajaCyclone #Nallakannu
    Next Story
    ×