search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பேசிய படி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்- நர்சு மீது நடவடிக்கை பாயுமா?
    X

    செல்போன் பேசிய படி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்- நர்சு மீது நடவடிக்கை பாயுமா?

    சேலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் பேசிய படி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் கூறியதை அடுத்து நர்சு மீது விசாரணை நடத்த கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி குள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28). ஆடிட்டர் அலுவலக உதவியாளர். இவரது மனைவி கலைமணி (26). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்தநிலையில் 2-வதாக கர்ப்பம் தரித்த கலைமணிக்கு தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 1-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2-ந் தேதி குழந்தை உயிரிழந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பிரபாகரன் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததும் மூச்சு, பேச்சு இல்லாமல் குழந்தை இருந்தது. அப்போது பணியில் இருந்த நர்சு செல்வி செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக செயல்பட்டார்.

    இதனால் இயற்கை உபாதை கழிவுகள் குழந்தையின் வயிற்றுக்குள் சென்று உயிரிழந்து விட்டது. அவர் துரிதமாக செயல்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் மறுநாள் போனில் பேசிய அந்த நர்சு குழந்தையின் உடல் நிலை பற்றி எதுவும் கேட்காமல் பிரசவம் பார்த்ததற்கு 8 ஆயிரம் தரும்படி கேட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து மாநகராட்சி கமி‌ஷனரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாநகர நகர் நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் நர்சு மீது தவறு இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×