search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான செல்வக்குமார்
    X
    கைதான செல்வக்குமார்

    அழகுநிலைய பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் சிறையில் அடைப்பு

    பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். #DMK #selvakumar
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் முத்து நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது46). தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான இவர் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா (40). பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் செல்வக்குமாருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் சத்யா, தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக செல்வக்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா நடத்தி வரும் அழகு நிலையத்திற்கு சென்ற செல்வக்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த செல்வக்குமார் சத்யாவை சரமாரி தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அழகு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.


    இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர், சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பி வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.

    அந்த காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. அதில் செல்வக்குமார், சத்யாவை காலால் எட்டி உதைப்பது போன்றும், சரமாரி தாக்குவதும் போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க. வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, செல்வக்குமாரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி மோகனபிரியா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் செல்வக்குமாரை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட செல்வகுமார், நிருபர்களிடம் கூறுகையில், எனக்கும் பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரனுக்கும் பிரச்சனை உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் தூண்டுதலின் பேரில் வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். பெரம்பலூர் போலீசார் எந்த வித முகாந்திரமும் இல்லாமலும், விசாரணை செய்யாமலும் என்னை கைது செய்துள்ளனர் என்றார்.

    இதனிடையே செல்வக்குமாரை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் ப வியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DMK #Selvakumar
    Next Story
    ×