search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட லதா.
    X
    கொலை செய்யப்பட்ட லதா.

    தியாகதுருகம் அருகே 6 பவுன் நகைக்காக இளம்பெண் கொலை- 2 வாலிபர்கள் சிக்கினர்

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே 6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது.

    லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.

    இதனைத் தொடர்ந்து அவரது மாமனார் தாரங்க பாணி அவரை தேடி வயலுக்குசென்றார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து வந்து அவரை தியாகதுருகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று லதாவிடம் விசாரணைநடத்த முயன்றனர். ஆனால் லதாவின் கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததாலும், ரத்தம் வந்து கொண்டே இருந்ததாலும் அவரால் பேச முடியவில்லை. பின்பு அவர் ஒரு பேப்பரில் நடந்த விபரத்தை எழுதி காட்டினார்.

    அதில் நான் வயலில் தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் வயலுக்கு வந்தனர். அவர்களில் 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    அவர்கள் என் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்செயினை கொடுக்கும்படி கேட்டனர். நான் நகையை கொடுக்க முடியாது என்றேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் என்னை கீழே தள்ளினர். 2 பேர் எனது காலை பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள் என் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தாலிசெயினை பறித்தனர்.

    நான் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்ததால் இறந்து விட்டேன் என நினைத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இவ்வாறு அதில் லதா எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் லதாவின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் லதா பரிதாபமாக இறந்து விட்டார். உடனே லதாவின் உடலுடன் பாதி வழியிலேயே ஆம்புலன்சில் சொந்த ஊர் திரும்பினர்.

    லதாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    இதற்கிடையே லதா இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கும், பெரியமாம்பட்டு கிராம மக்களுக்கும் தெரியவந்தது. அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் பெரியமாம்பட்டு, சேலம்- சென்னை தேசிய நெடுஞ் சாலைல் வாகனத்தில் லதாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணத்துடன் மறியல் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அதுவரை செல்ல மாட்டோம் என்று ஆவேசமாக கூறினர்.

    குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் லதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதன்பின்பு லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் லதா கூறிய அடையாளங்களை வைத்து பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் இன்று காலை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    6 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலை செய்யப்பட்ட லதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    Next Story
    ×