search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பில் மழை தீவிரம் - 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை நெருங்கும் பெரியாறு அணை
    X

    நீர்பிடிப்பில் மழை தீவிரம் - 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை நெருங்கும் பெரியாறு அணை

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக பெய்து வருகிறது.

    இடுக்கி மாவட்டத்திலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையினால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று 134.40 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 4394 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 1600 கன அடி மின்சார உற்பத்திக்கும், 700 கன அடி இரைச்சல் பாலம் வழியாகவும் செல்கிறது. நீர் இருப்பு 5726 மி.கன அடியாக உள்ளது.

    155 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிற்கு பிறகு 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதன்முதலாக கடந்த 21.11.2014-ந் தேதி 142 அடி வரை தேக்கப்பட்டது.

    அதன்பிறகு 5.12.2015-ந் தேதி 2-வது முறையாக 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்குகூட தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு சில தினங்களில் 142 அடி வரை நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்டு சென்ற மத்திய துணைக் குழுவினர் அணை பாதுகாப்பு குறித்து உறுதி செய்ததுடன் நீர்மட்டம் உயரும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தி சென்றுள்ளனர். இதனால் 142 அடி உயரும் நாளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆவலுடன் காத்துள்ளனர்.

    பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் கூடுதல் தண்ணீரால் வைகை அணை நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 50.62 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1957 கன அடி தண்ணீர் வருகிறது. திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2076 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.65 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×