search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல்

    மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா மற்றும் போதைபொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மண்டம் அருகே உள்ள சீனியப்பா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் அடுத்து ராமேசுவரம் டி.எஸ்.பி. (பயிற்சி) கோபாலகிருஷ்ணன், உச்சிப் புளி சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தனிப் பிரிவு தலைமை காவலர்கள் வரதராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சீனியப்பா கடற்கரையில் ஒரு படகு அருகே மூட்டை ஒன்று கேட்பாராற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது. அதில் 152 பாக்கெட்டுகள் கொண்ட 304 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சுந்தர மடையானை சேர்ந்த முருகன் (வயது 45), ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த ஜெயகணேஷ் (35), கீழக்கரை பஞ்சந்தாங்கியை சேர்ந்த கிட்டிஸ்வரன் என்ற முத்து (37) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.

    Next Story
    ×