search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது - ஒரே நாளில் 8 அடி உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது - ஒரே நாளில் 8 அடி உயர்வு

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகலில் 96 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வந்தவண்ணம் உள்ளது.

    84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 38 ஆயிரத்து 289 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதேபோல 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 122.4 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 71 ஆயிரத்து 964 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 81 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் தமிழகத் திற்கு சீறிப்பாய்ந்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2 மடங்கைவிட அதிகரித்ததால் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையின் இருபுறங்களையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த பல மாதங்களாக வறண்டுபோய் வெறும் பாறைகளாக காட்சி அளித்த ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் புதுவெள்ளம் செந்நிறத்தில் பாறைகளை மூழ்கடித்து செல்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை தெரியாத அளவிற்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது. தினமும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் 9-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை காவிரி கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் சத்திரம், மாறுகொட்டாய், ஆத்தூர், நாகமறை, நெருப்பூர், பண்ணவாடி ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தண்டோரா மூலமும் தொடர்ந்துபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

    ஒகேனக்கல் அருவி பக்கம் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் தீயணைப்பு துறையினரும் வருவாய்த்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்தவண்ணம் உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

    நேற்று காலை 87.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.73 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 96 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 1 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து 100 மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் 19-ந் தேதி (வியாழக்கிழமை) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிடுகிறார். இதில் அமைச்சர்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    கடந்த ஆண்டு தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் முழுமையாக தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    மேட்டூர் அணை வரலாற்றில் குறிப்பிட்ட நாட்களில் தண்ணீர் திறந்தது 15 ஆண்டுகள் மட்டும் தான். ஆனால் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு பிறகே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விவசாயிகள் மனதில் பால் வார்க்கும் விதமாக கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே குறுவை சாகுபடிக்கான காலம் முடிவடைந்த நிலையில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பின்பே சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்க முடியும். தற்போது திறக்கும் நீர் குறுவை, சம்பா சாகுபடிக்கு பயன்படாது. அந்த நீரை டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களில் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சம்பா சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். ஆனால் நடப்பாண்டு தற்போது தான் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தாமதமாக தூர்வாரும் பணி தொடங்கி உள்ளதல் மேட்டூர் அணையில் இருந்து 19-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாதது மட்டுமின்றி ஏரி, குளங்களிலும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×