search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரத்தில் பதுங்கிய 8 ரவுடிகள் கைது- போலீஸ் அதிரடி வேட்டை
    X

    சோழவரத்தில் பதுங்கிய 8 ரவுடிகள் கைது- போலீஸ் அதிரடி வேட்டை

    சோழவரத்தில் பதுங்கி இருந்த 8 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதில் மணிகண்டன், நாகராஜ், ராமு, சங்கர் உள்பட 8 ரவுடிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
    திருவள்ளூர்:

    சென்னையில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தலைமறைவு குற்றவாளிகளை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் ராயப்பேட்டை பகுதியில் ரவுடி ஆனந்தன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட போது போலீஸ்காரர் ராஜவேலு தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் ராஜவேலுவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர்.

    இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய ரவுடி ஆனந்தன் உள்பட 7 பேரை பிடித்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான்.

    ஏற்கனவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் என்கவுண்டர் நடந்து இருப்பது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் ரவுடிகள் பலர் சென்னை நகரில் இருந்து வெளியேறி புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மேலும் திருவள்ளூர் மாவட்டத்தையொட்டி உள்ள சென்னை புறநகர் பகுதிகளிலும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் இருந்து வந்தது.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ரவுடிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    சோழவரம் பகுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து நேற்று இரவு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நேரடியாக களம் இறங்கி சோதனையில் ஈடுபட்டார். போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோழவரத்தில் உள்ள காந்தி நகர், சோலையம்மன் நகர், ஆட்டங்தாங்கல் ஆகிய இடங்களில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் வழிப்பறி கொள்ளையர், சிறு சிறு வழக்குகள் உள்ளவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் அனைவரையும் காரனோடையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பிடிபட்டவர்கள் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறித்து விசாரித்தனர்.

    இதில் மணிகண்டன், நாகராஜ், ராமு, சங்கர் உள்பட 8 ரவுடிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை எச்சரித்து குற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×