search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
    X

    கோவை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

    கோவை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா தின பயிற்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    கோவை:

    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டது. கோவை வெள்ளிங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 150 பேர், அதிவிரைவுப்படை வீரர்கள் 400 பேர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்தி வாய்ந்த ‘உப-யோகா’ கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச் சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கோவை அரசு கலை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    வ.உ.சி. மைதானத்தில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் கோவை பகுதி சார்பாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை மாநகர காவல் துறை மற்றும் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அவினாசி ரோட் டில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துணை கமி‌ஷனர்கள் தர்மராஜன் பெருமாள், ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மருத்துவ மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தின் பல இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பிலும் யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த யோகா பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாகவும், மன அழுத்தத்தை குறைக்க உதவியாகவும் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×