search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடவானி மலை கிராமத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.
    X
    எடவானி மலை கிராமத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.

    சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் 5 கி.மீ. தூரம் வரை தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த ஆதிவாசி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

    மேலும் இவர்கள் இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து செல்லும் சிரமமான நிலையும் உள்ளது.

    இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

    முதலில் அவருக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கில் கம்பில் சேலையால் தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு அவர்கள் ஓட்டமும், நடையுமாக அரளிகோணம் வரை சென்றனர். அங்குள்ள சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் இயங்காத நிலையில் இருந்தது.

    இதனால் பெண்கள் அமைப்பான குடும்ப ஸ்ரீ என்ற தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் மூலம் மணியை அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    குழந்தையுடன் மணி.

    அந்த மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். மணிக்கு சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மணி இது பற்றி கூறும் போது, எங்களது குலதெய்வம் நல்லீஸ்வரன் ஆகும். எனக்கு குலதெய்வம் அருளால் தான் தற்போது நல்லமுறையில் குழந்தை பிறந்து உள்ளது என்றார்.

    சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டி தான்இந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மகளிர் ஆணையம் தலைவர் ஜோசபைன் இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். #TribalWomen #AttapadiVillage
    Next Story
    ×