search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் விசாரணை - 5 வழக்குகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு
    X

    சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் விசாரணை - 5 வழக்குகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது 3 இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து நடந்த வன்முறையில் அரசு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், வடபாகம், தென்பாகம் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதை தொடர்ந்து வழக்குகள் குறித்த ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த ஆவணங்களின் அடிப்படையில் தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். இந்த வழக்குகளுக்கு தனித்தனியே விசாரணை அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் நியமித்துள்ளார்.

    அதன்படி சிப்காட் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் விசாரிக்கிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணாநகர் துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை திருச்சி சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரிக்கிறார்.

    இப்பகுதியில் இரு ஜீப்கள் எரிக்கப்பட்ட வழக்கை மதுரை சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்பாபு விசாரணை நடத்துகிறார். தென்பாகம் காவல்நிலையத்தில் துப்பாக்கி குண்டு வீசப்பட்ட வழக்கை நெல்லை சி.பி.சி.ஐ.டி(ஓ.சி.யூ) துணை போலீஸ் சூப்பிரண்டு கலிமுல்லா விசாரணை நடத்துகிறார். திரேஸ்புரம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை மதுரை சி.பி.சி.ஐ.டி சி.சி. பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்கொள்கிறார்.

    ஒவ்வொரு துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் கீழும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்த 5 வழக்குகள் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடியில் பிரத்யேகமாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும், வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறியவும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

    துப்பாக்கி சூடு உள்ளிட்ட வழக்குகள் விவரங்களை அவர் துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கேட்டறிந்தார். ஒவ்வொரு வழக்குகளின் நிலை, அந்த வழக்குகளில் விசாரிக்கக் கூடிய பொதுமக்கள் மற்றும் போலீசார், வழக்கின் புகார்தாரர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். வழக்கு விசாரணையை விரைந்து நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×