search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டு பாய்ந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.
    X
    குண்டு பாய்ந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.

    குண்டுபாய்ந்து சிறுவன் காயம் - அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த சிறுவனின் தந்தை கைது

    வேலூரில் குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்ததையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் கல்லறைபட்டை சேர்ந்தவர் குமார் (வயது 35) தொழிலாளி. இவரது மகன் ராகவன் (9). கடந்த 26-ந்தேதி குமார் அந்த பகுதியில் உள்ள காட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    அதனை வீட்டில் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது துப்பாக்கி எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. அதில் இருந்து வெளியேறிய குண்டுகள், ராகவனின் இடது உள்ளங்காலில் பாய்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் சாதாரண காயம் தான் என்று கட்டு போட்டு அனுப்பினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகவன் அவரது தாயுடன் செங்கம் புதூர் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது ராகவனுக்கு காலில் பயங்கரமாக வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர்.

    அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, காயம் ஏற்பட்ட இடத்தில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் சிறுவன் ராகவனின் காலில் இருந்து 4 துப்பாக்கி ரவைகளை அகற்றினர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சிறுவனின் தந்தை குமாரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்தனர். அப்போது அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×