search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் அருகே போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - மர்மநபர்கள் கைவரிசை
    X

    விளாத்திகுளம் அருகே போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - மர்மநபர்கள் கைவரிசை

    விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 24-ந் தேதி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மட்டும் எரிந்து நாசமானது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் போலீஸ் நிலையம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். அந்த குண்டு அங்கிருந்த அறிவிப்பு பலகையின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

    இதையடுத்து போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டை வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி சென்றனர். ஆனால் அந்த மர்மநபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×