search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.
    X
    திருப்பத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் பஸ் இயக்கப்பட்டன.
    வேலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று, தி.மு.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. ஆனால், வேலூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது. தனியார் பஸ்கள், லாரி, ஆட்டோ, மற்றும் வாகனங்கள் வழக்கம் போல் ஓடியது.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது என்று எஸ்.பி. பகலவன் எச்சரித்தார்.

    பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தலைக்கவசம், லத்தியை போலீசார் கையில் வைத்திருந்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, அதிரப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், வேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தி.மு.க. முழு அடைப்பு போராட்டத்தால், அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. முன்கூட்டியே மருத்துவ விடுப்பு எடுத்திருந்த தொழிலாளர்களும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

    ஆனாலும், ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    வேலூரில் அண்ணா சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார், காந்திரோடு, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

    நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படாமல் இருந்தது. திறக்கப்பட்டிருந்த கடைகளில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் நகரின் மைய பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு, சின்னக்கடை தெரு, பெரியக்கடை தெரு உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    வாணியம்பாடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சி.எல். ரோடு, கச்சேரி ரோடு, ஜின்னா ரோடு, முகம்மது அலி பஜார், நகைக்கடை தெரு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பகுதி, கோடியூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரக்கோணம், குடியாத்தம், ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர் மற்றும் ஆம்பூர், பேரணாம்பட்டு உள்பட வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    தி.மு.க. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, தண்டராம்பட்டு, போளூர், செய்யாறு உள்பட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை.
    Next Story
    ×