search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்த அவலம்
    X

    அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்த அவலம்

    திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வைரலாக பரவியது குறித்து மருத்துவத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் கைலி அணிந்தவாறு ஒருவர் பிரேத பரிசோதனை செய்வதும், பின்னர் உடலை ஊசியால் தைப்பது போன்ற காட்சிகள் செல்போன்களில் வீடியோவாக பரவியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    டாக்டர் செய்ய வேண்டிய பிண பரிசோதனையை கைலி அணிந்து செய்யும் நபர் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் அவர் துறையூர் அரசு மருத்துவமனையில், 3 மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வரும் துறையூர் அருகே உள்ள வாலீஸ்புரத்தை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.

    டாக்டரின் ஆலோசனையின் பேரில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தைக்கவும், துணியால் சுற்றி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கும் துறையூர் ஆஸ்பத்திரியில் பெரியசாமி, மதியழகன் என 2 பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சலவை தொழிலாளி வீரமணி பல மாதங்களாக பிரேத பரிசோதனை போன்ற வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும் போது, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல் சிகிச்சைகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். சிகிச்சைக்கான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

    பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் சம்பந்தமில்லாத நபர் கைலி அணிந்து கொண்டு பிரேத பரிசோதனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகமும் மருத்துவ துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து திருச்சி மருத்துவத் துறை இயக்குனர் சம்ஷாத் பேகம் விசாரணை நடத்தி வருகிறார். அவர் கூறும் போது, இறந்தவர் உடலை சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி விசாரணை நடத்த உள்ளேன். விசாரணை முடிந்ததும் அதற்கான அறிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்வார்கள் என்றார். விசாரணையில் பிரேத பரிசோதனை செய்தது சலவை தொழிலாளி என்பது தெரிய வந்தால் துறையூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×