search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையன் சிக்கினான்
    X

    ஓமலூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையன் சிக்கினான்

    ஓமலூர் அருகே ஆசிரியர் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி. செட்டியப்பட்டி பகுதியில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல் டாக்டர் வீட்டில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் கொள்ளையன் புகுந்து, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றான்.

    கொள்ளையன் திருடும் காட்சிகள், கதவை உடைக்கும் காட்சிகள், ஆயுதங்கள் வைத்திருந்த காட்சிகள் என பல்வேறு காட்சிகள் அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்தது. இதை வைத்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொள்ளையர்களை பிடிக்க வேண்டி, முன் எச்சரிக்கையாக இரவு நேரத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தூங்காமல் சிப்ட் முறையில் அந்த பகுதியில் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஆர்.சி. செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் மகன் கஸ்பர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் கஸ்பர் வெளியில் காற்றொட்டமாக படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர், கஸ்பர் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து வீட்டிற்குள் செல்ல முற்பட்டபோது, கஸ்பர் திடீரென கண்விழித்தார். மேலும், யார்? என கேட்டபோது, மர்மநபர் எதுவும் பேசமால் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    உடனே கஸ்பர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு பொதுமக்களும், இளைஞர்களும் சேர்ந்து அந்த நபரை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவரை வீட்டிற்கு வெளியே உள்ள கம்பி வேலி கம்பத்தில் கட்டி வைத்து விசாரித்தனர். அவர் எந்த தகவலும் சொல்லாத காரணத்தால் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்தபோது, அவர், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் என்பதும், மேச்சேரி பகுதியில் ஆடுகள், கோழிகள் திருடிய வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து குமரேசனை ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு ஏதும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஆசிரியர் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×