search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
    X
    கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

    கூட்டுறவு அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்: தி.மு.க-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் கூட்டுறவு அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக தி.மு.க-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மீது போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது.

    மாவட்டத்தில் உள்ள 114 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி மற்றும் துணி நூல் கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

    இதில், தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் ஒட்டப்பட வேண்டும். ஆனால் சில சங்கங்களில் தகுதியான வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

    சில சங்கங்களில் வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெறும் வகையில் அறிவிப்பு பட்டியல் ஒட்டப்பட்டதாக புகார் கிளம்பியது. இந்த தகவல் வெளியானதும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாரதிய ஜனதா, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நிர்வாகிகள் ஏராளமானோர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு துறை மண்டல இணைபதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    அவர்கள் கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளரும், மாவட்ட தேர்தல் பார்வையாளருமான நடுக்காட்டு ராஜாவை சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக முறையிட்டனர்.

    குமரி மாவட்டத்தில் முறையாக வேட்பாளர்களை தேர்வு செய்த சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும், முறையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்தல் நடக்க வேண்டும். இதனை செய்ய தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அதிகாரி நடுக்காட்டு ராஜா இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென எம்.எல்.ஏ.க்களிடம் உறுதி அளித்தார். மேலும் புகார் கூறப்பட்ட நாகர்கோவில் சரகத்தில் உள்ள 2 கூட்டுறவு சங்கங்கள், தக்கலை சரகத்தில் உள்ள 7 கூட்டுறவு சங்கங்கள் என 9 கூட்டுறவு சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்த பரிந்துரை செய்து மாநில கூட்டுறவு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். அதன் நகலகள் எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் நாகர்கோவில் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 8½ மணி நேரத்திற்கு பிறகு இரவு 6.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து தங்கள் போராட்டம் தொடர்பான மனுவையும் அளித்தனர். அதன் பிறகு எம்.எல்ஏ.க்களும், அவர்களுடன் வந்த நிர்வாகிகள், தொண்டர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    தி.மு.க-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களுடன் வந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியபோது, அங்கிருந்த ஊழியர்கள் சிலரை தாக்கியதாகவும், பொருட்களை சேதப்படுத்தியதாகவும் அலுவலக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுபற்றி மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்தார்.

    அதன் பேரில், நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    பின்னர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், வடசேரி கூட்டுறவு பண்டக சாலை தலைவர் சீதாமுருகன், பெருவளம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பள்ளவிளை ராஜேஷ் என்ற மோஷி தயான், ஊசி ராஜன், முருகன் என்ற மாதவன் பிள்ளை, சேம்ராஜ் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அரசு அலுவலகத்தில் கும்பலாக நுழைதல், தகாத வார்த்தைகள் பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண் ஊழியரை தாக்குதல் என இந்திய தண்டனைச் சட்டம் 147, 294(பி), 332, 353, 506(1), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 3(1) உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×