search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக போலீஸ்காரர் மீது புகார்: நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
    X

    கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக போலீஸ்காரர் மீது புகார்: நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

    கூடலூரில் போலீஸ்காரர் மீது கந்து வட்டி புகார் கொடுத்த சம்பவம் குறித்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கந்து வட்டி கொடுமைக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்து வட்டி வழக்கு தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கூடலூரில் நேற்று இந்த முகாம் நடைபெற்றது. முகாமுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சவுந்திர ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், நசீர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மனு வாங்கினார்.

    முகாமில் கூடலூர் பகுதியை சேர்ந்த 6 பேர் மனு அளித்தனர். அதில் 3 பேர் போலீஸ்காரர் மீது குற்றம் சாட்டி இருந்தனர். அத்திப்பாளியை சேர்ந்த டீக்கடைக்காரர் சம்சுதீன் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது-

    கடந்த 2010-ம் ஆண்டு கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரிடம் ரூ, 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினேன்.

    இதற்காக எனது வீட்டு பத்திரத்தை வாங்கி கொண்டு பணம் கொடுத்தார். இதுவரை அசல், வட்டி சேர்த்து ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் திரும்ப கட்டிவிட்டேன்.

    ஆனால் எனது வீட்டு பத்திரத்தை திரும்ப தராமல் இன்னும் ரூ. 2 லட்சம் வழங்கினால் மட்டுமே பத்திரத்தை தருவதாக மிரட்டி வருகிறார். எனவே கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார். அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களையம் சம்சுதீன் காண்பித்தார்.புகாருக்கு உள்ளான போலீஸ்காரரின் சொந்த ஊர் கரூர் ஆகும். கந்து வட்டியில் வசூலித்த பணத்தை கொண்டு கூடலூர் குசுமசேரி பகுதியில் சொந்த வீடு கட்டி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    மனுவை பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா விசாரணை நடத்தி வருகிறார்.

    விசாரணையில் போலீஸ்காரர் கந்து வட்டி வசூலித்தது நிரூபிக்கப்பட்டால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    முகாமில் அரசு பெண் ஊழியர் ஒருவர் புகார் மனு அளித்தார். அதில் தான் வாங்கிய பணத்தை விட கூடுதல் பணம் கேட்டு சிலர் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இன்று (புதன் கிழமை) பந்தலூர் வணிக வளாகத்திலும், நாளை (வியாழக்கிழமை) ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலும், 3-ந் தேதி குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×