search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே வெடி விபத்தில் கோவில் இடிந்து தரைமட்டம்: மேளம் அடிப்பவர் பலி
    X

    போச்சம்பள்ளி அருகே வெடி விபத்தில் கோவில் இடிந்து தரைமட்டம்: மேளம் அடிப்பவர் பலி

    போச்சம்பள்ளி அருகே வெடி விபத்தில் பிள்ளையார் கோவில் இடிந்து தரைமட்டமானது. இதில் மேளம் அடிப்பவர் பரிதாபமாக இறந்தார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எ.மோட்டூர் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது (வயது 55) திடீரென மரணம் அடைந்தார். இவர் இறந்த 15 நாட்களுக்கு பிறகு மேகநாதன் என்பவரும் திடீரென உயிரிழந்தார்.

    இவ்வாறு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். எனவே, பேய்களை விரட்ட முடிவு செய்து அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பூஜையை செய்வதற்காக எ.மோட்டூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை பொருட்களை வைத்தனர். பூஜை முடிந்த பிறகு வெடி விடுவதற்காக அந்த பூஜை பொருட்களுடன் வெடி பொருட்களையும் பூஜை செய்ய வேண்டி வைத்திருந்தனர்.

    பின்னர் இரவு 10 மணி அளவில் பிள்ளையார் கோவிலில் மேளதாளத்துடன் பூஜைகள் தொடங்கப்பட்டது. அப்போது பூஜை செய்யும் பணியில் அப்பகுதியை சேர்ந்த ஊர்கவுண்டர் முருகேசன் (வயது 55), முனியம்மாள் (70), சுசி(70), சுமதி(30), பழனி(50) மகேந்திரன்(56), மகாலிங்கம் (45), தங்கவேல்(60) ஆகிய 8 பேர் ஈடுபட்டனர்.

    மேலும் கோவில் வெளிபுறத்தில் முருங்கப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (55) என்பவர் நின்று கொண்டு மேளம் அடித்துக்கொண்டு இருந்தார்.

    இரவு 10.15 மணி அளவில் கருவறையில் பிள்ளையாருக்கு ஊதுபத்தி காட்டியபோது அதில் இருந்து தீ கங்கல் பறந்து பூஜையில் வைத்திருந்த வெடி பொருட்கள் மீது விழுந்து அவை பயங்கர சத்தத்தடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் சிக்கிய 8 பேரும் பலத்த தீ காயங்களுடன் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் அதிக சத்தத்துடன் கூடிய வெடி மாரியப்பன் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறியது. இந்த வெடி விபத்தில் காங்கிரீட் சுவர்களால் ஆன பிள்ளையார் கோவில் இடிந்து தரைமட்டமானது.

    இது பற்றி தகவல் அறிந்த ஊர்மக்கள் அங்கு திரண்டு வந்து காயம் அடைந்த ஊர்கவுண்டர் முருகேசன், முனியம்மாள், சுசி, சுமதி, பழனி, மகேந்திரன், மகாலிங்கம், தங்கவேல் ஆகிய 8 பேரையும் போச்சம் பள்ளி மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் தங்கவேல் என்பவருக்கு கால் முறிந்தது.

    இன்று காலை முதல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரைமட்டமான கோவிலை பார்ப்பதற்காக வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அரசம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார், வருவாய் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான மாரியப்பன் கோட்டப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள புலியூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். மேலும் வேலை இல்லாத நேரங்களில் மேளம் அடிக்க போய் வந்தார். இந்த நிலையில் நேற்று மேளம் அடித்தபோது வெடி விபத்தில் சிக்கி மாரியப்பன் பலியானது அவரது குடும்பத்திரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    Next Story
    ×