search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி-தினகரன்-ஓ.பி.எஸ். அ.தி.மு.க. அணிகள் சசிகலா தலைமையில்தான் இயங்குகிறது: ஈஸ்வரன் குற்றச்சாட்டு
    X

    எடப்பாடி-தினகரன்-ஓ.பி.எஸ். அ.தி.மு.க. அணிகள் சசிகலா தலைமையில்தான் இயங்குகிறது: ஈஸ்வரன் குற்றச்சாட்டு

    எடப்பாடி-தினகரன்-ஓ.பி.எஸ். அ.தி.மு.க. அணிகள் சசிகலா தலைமையில்தான் இயங்குகிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு.

    சென்னை:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. எத்தனை அணிகளாக பிரிந்தாலும அதை இயக்குவது சசிகலாவும், தினகரனும்தான். அ.தி. மு.க. முழுமையையும் சசிகலாவுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நடக்கின்ற அத்தனையும் ஒரு நாடகம்தான்.

    சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பரிந்துரைத்ததும், முதல்- அமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததும் ஓ.பி.எஸ். உள்பட அனைவரும்தான். சசிகலா குடும்பத்திற்கு எதிராக எழுந்த மக்களின் எதிர்ப்புதான் அ.தி. மு.க.வை இத்தனை நாடகங்களையும் அரங்கேற்ற தூண்டியது.

    ஓ.பி.எஸ். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்வார். அதற்காகத்தான் தர்ம யுத்தம் நடத்துகிறேன் என்று சொல்வார். ஆனால் அதற்காக நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டார். நீதிமன்றத்திற்கு சென்று தர்மத்தை நிலைநாட்ட அவரை எது தடுத்தது.

    சசிகலாவும், தினகரனும் கட்சி செயல்பாடுகளில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்வார். ஆனால் ஏன் என்று சொல்ல மாட்டார். அதற்குப் பிறகு எத்னையோ கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

    பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் சசிகலாவும், தினகரனும், அவர்களுடைய குடும்பமும் என்ன தவறுகளை செய்தார்கள் என்று பேச மாட்டார். ஆட்சியை கவிழ விடமாட்டேன் என்று சூளுரைப்பார். இது வெல்லாம் தமிழக மக்களை அவர் ஏமாற்றுகின்ற நடவடிக்கைகள் இல்லையா?

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி விட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தில் சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வார்கள்.

    இவர்கள் ஒதுக்கி வைத்தோம் என்று சொல்கிற சசிகலாவையும், தினகரனையும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட பல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சென்று சந்திப்பார்கள், அறிவுரை பெறுவார்கள். ஆனால் அவர்களை இவர்கள் நீக்கி விட்டார்கள்.

    தினகரன் ஒதுங்கி கொண்டேன் என்று சொல்வார். ஆனால் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு பணம் கொடுக்க முயற்சிப்பார். தன்னை ஒதுக்கி விட்ட அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தனியே பேசி ஆலோசனை நடத்துவார்.

    இ.பி.எஸ். அணியினர் அதில் என்ன தவறு, அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். முதல்-அமைச்சர் வாய்மூடி மவுனமாக இருப்பார்.

    அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவையும், தினகரனையும் நீக்கியது நீக்கியது தான் என்பார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலா தான் எங்கள் பொதுச்செயலாளர், தினகரன்தான் துணைப் பொதுச் செயலாளர் என்பார்.

    அவர்களை அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சந்திப்பில் என்ன தவறு என்பார்கள். ஒரு சில அமைச்சர்கள் இதற்கெல்லாம் முதல்- அமைச்சர்தான் பதில் சொல்வார் என்பார்கள். இதற்கு முதல்-அமைச்சர் எந்த பதிலையும் சொல்ல மாட்டார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொலைக் காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி தருவார். ஆனால் எந்த செயல்பாட்டையும் செய்ய மாட்டார்.

    போயஸ்கார்டன் இல்லத்திற்கு சென்று தனக்குத் தான் சொந்தம் என்பார். பரபரப்பு செய்தியாக மாற்றுவார். ஆனால் தனது உரிமைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டார்.

    மொத்தத்தில் அணி அணியாக பிரிந்திருக்கிறோம் என்று ஊடகங்களின் மூலமாக ஏதாவது ஒரு செய்தியை தினசரி வர வைக்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவரும் சசிகலாவின் தலைமையில்தான் இயங்குகிறார்கள் என்பது.

    ஓ.பி.எஸ்., சசிகலா குடும்பத்தினரின் சாணக்கிய திட்டத்தின்படிதான் எதிர்ப்பது போல நடிக்கிறார் என்று எண்ண தோன்றுகிறது. மொத்தத்தில் இப்படி ஒரு நாடகத்தை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    இப்போது குடியரசு தலைவர் தேர்தலில் எல்லா அணியினருமே ஒரே வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் இது நிரூபணமாகிறது.

    தினகரனும், தம்பித்துரையும் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாட்டை முடிவு செய்கிறார்கள். பின்பு அடுத்த நாள் அனைத்து அணியினரும் அதாவது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தினகரன் மூன்று பேரும் ஒரே வேட்பாளருக்கு ஆதரவு என அறிவிக்கிறார்கள்.

    தமிழக மக்கள் மத்தியில் சசிகலா குடும்பத்துக்கு இருக்கிற எதிர்ப்பை புரிந்து கொண்டு அதிலிருந்து தப்பிக்கவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது. சசிகலா தான் சிறையிலிருந்து கொண்டு அ.தி.மு.க.வை இயக்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×