search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே தந்தை இறந்தது கூட தெரியாமல் உடல் அருகே விளையாடிய சிறுவன்
    X

    கரூர் அருகே தந்தை இறந்தது கூட தெரியாமல் உடல் அருகே விளையாடிய சிறுவன்

    தந்தை இறந்தது கூட தெரியாமல் உடல் அருகே சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்ததும், உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத துயர சம்பவம் கரூர் அருகே நடந்துள்ளது.
    குளித்தலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யர்நாயக்கர்(வயது 50). நாடக நடிகரான  இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரகூரில் முதல் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அய்யர்  வேறு பிரிவை சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூரை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்தார். இதனால் அய்யரை அவரது  சமுதாயத்தினர் விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது மனைவிக்கு தவசுமணி(2) என்கின்ற ஆண் குழந்தை உள்ளது. ஆனால் 2-வது மனைவி  இறந்து விட்டதால் அய்யர் தனது மகன் தவசுமணியுடன்  கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கொசூர் கடை வீதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

    மேலும் உடல் நிலை பாதிப்பால் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில் கட்டிலில் படுத்தவாறு இறந்து விட்டார். ஆனால் தனது தந்தை தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து சிறுவன் தவசுமணி அருகில் இருந்த தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அய்யரின் உடல் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்பகுதி பொதுமக்கள்  அய்யர் இறந்தது தெரியாமல் தவசுமணி விளையாடி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அய்யரின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது,  அய்யர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது  சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதாகவும், அதனால் இறந்த அவரது  உடலையும், சிறுவன் தவசுமணியையும் பெற்று கொள்ள மறுத்து விட்டதும் தெரியவந்தது. 

    இதனால் கொசூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அனாதை பிணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அய்யர் உடலை அனுப்பி வைத்தனர். மேலும் கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுவன் தவசுமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவனை திண்டுக்கல் சிறு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

    தாய்-தந்தையை இழந்து வாடும் தவசுமணியை  அய்யரது உறவினர்கள் மனம் இறங்கி வந்து பெற்று கொள்வார்களா? என்று அந்த பகுதி மக்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×