search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் கள ஆய்வுக்காக நடப்பட்டிருந்த கல்லை படத்தில் காணலாம்.
    X
    ஹைட்ரோ கார்பன் கள ஆய்வுக்காக நடப்பட்டிருந்த கல்லை படத்தில் காணலாம்.

    பொதுமக்கள் எதிர்ப்பால் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வை பாதியில் விட்டு சென்ற பணியாளர்கள்

    சாத்தான்குளம் அருகே ஓஎன்ஜிசி சார்பில் நடப்பது மீத்தேன் ஆய்வு என தெரியவந்ததால், ஆவேசமடைந்த பொதுமக்கள் அங்கு நடப்பட்டிருந்த கல்லை அடித்து நொறுக்கினர். இதனால் பணிக்கு வந்தவர்கள் ஆய்வை பாதியிலேயே கைவிட்டு சென்றனர்.
    சாத்தான்குளம்:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக செயற்கைகோள் மூலம் படங்கள் எடுக்கப்பட்டன.

    அதன் அடிப்படையில் நேற்று காலை காஷ்மீர் முதல் குமரி வரைதொடர்ந்து 36 மணி நேரம் செயற்கைகோள் மூலம் ஆய்வு பணி தொடங்கியது. இதற்காக புவியியல் வல்லுநர்கள் மூலம் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் கருமேனி ஆற்றுப்பாலத்தை ஒட்டி தேர்வு செய்யப்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டி அதில் ஓஎன்ஜிசி என எழுதி நேற்று முன்தினம் கல் நட்டினர்.

    இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு நவீன கருவிகள் மூலம் வந்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு இருப்பதை கண்டறியும் களப்பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து கள ஆய்வில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

    ஓஎன்ஜிசி சார்பில் நடப்பது மீத்தேன் ஆய்வு என நேற்று மாலை தெரியவந்ததால் ஆவேசம் அடைந்த அவர்கள் அங்கு நடப்பட்டிருந்த கல்லை அடித்து நொறுக்கினர். இதனால் ஆய்வு பணிக்கு வந்தவர்கள் ஆய்வை பாதியிலேயே கைவிட்டு சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வேறு ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.



    Next Story
    ×