search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: திருச்சி கோர்ட்டு உத்தரவு
    X

    நத்தம் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: திருச்சி கோர்ட்டு உத்தரவு

    சூரிய மின்சக்தி திட்டத்துக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக நத்தம் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 50 ஏக்கர் நிலம் உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நெல்லையை சேர்ந்த காமராஜ் என்பவர் லோகநாதனை சந்தித்தார். உங்களது நிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி திட்டம் தொடங்க மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் அனுமதி பெற்றுத்தருவதாக கூறினார்.

    இதற்கு 200 ஏக்கர் நிலம் வேண்டும் ரூ.50 லட்சம் பணம் ஏற்பாடு செய்யுமாறு கூறினார். முதற்கட்டமாக ரூ.20 லட்சமும், அதன் பிறகு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.50 லட்சத்தை லோகநாதன், காமராஜிடம் கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு சூரியஒளி மின்சக்தி திட்டம் தொடங்க அனுமதி பெற்றுத் தரவில்லை. இதற்கிடையே ஆட்சிக்காலம் முடிந்தது.

    அதன்பிறகு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும், நத்தம் விசுவநாதனே வெற்றி பெற்று அமைச்சராவார் . அப்போது அனுமதி பெற்றுத்தருவோம் என்று கூறி இழுத்தடித்து வந்தார்.

    ஆனால் தேர்தலில் நத்தம் விசுவநாதன் தோல்வியை தழுவினார். இதனால் லோகநாதனுக்கு காமராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அனுமதி பெற்றுத்தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

    இதுகுறித்து அவர்களிடம் பலமுறை கேட்டபோதும் உரிய பதில் இல்லை. மேலும் பாஸ்கர், காமராஜ், சென்னையை சேர்ந்த அருண் குமார் ஆகியோர் லோகநாதனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கும், திருச்சி போலீஸ் கமி‌ஷனருக்கும் லோகநாதன் புகார் மனு அனுப்பினார். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து லோகநாதன் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 2-ல் வழக்கு தொடர்ந்தார். லோகநாதனின் மனுவை நீதிபதி முரளிகண்ணன், விசாரித்து லோகநாதன் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்பட 4 பேர் மீதும் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
    Next Story
    ×