search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 20 அடியாக குறைந்தது
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 20 அடியாக குறைந்தது

    பாபநாசம் அணையின் மொத்த அடி 143 ஆகும். இந்த அணை நீர்மட்டம் இன்று காலை வெறும் 20.45 அடியாக குறைந்து உள்ளது. அணையில் தண்ணீர் குறைந்ததால் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழைகள் பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறண்ட நிலை காணப்படுகிறது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டுவிட்டன. மாவட்டமே வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

    அவ்வப்போது காற்றுடனும், இடி, மின்னலுடனும் பெய்யும் மழை சேதங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. மாவட்டத்தில் தற்போதைய சூழலில் அணைகளில் தண்ணீர் குறைந்துவிட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் மொத்த அடி 143 ஆகும். இந்த அணை நீர்மட்டம் இன்று காலை வெறும் 20.45 அடியாக குறைந்து உள்ளது. அணையில் தண்ணீர் குறைந்ததால் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் வெறும் 16.40 அடியாகவே உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.98 அடியாக இருக்கிறது. ராமநதி அணை நீர்மட்டம் 29.13 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 32.39 அடி யாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 22.12 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு அணையில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து அணைகள் வறண்ட நிலையில் உள்ளன‌. அடவிநயினார் அணையில் 30.50 அடி தண்ணீரே உள்ளது.

    பாபநாசம் அணையில் தண்ணீர் குறைந்து போனதால் இன்னும் ஓரிரு நாளில் அணை மூடப்படலாம் என தெரிகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுமே வறண்டு விட்டன. கிணறுகளில் தண்ணீர் குறைந்து தென்னை மரங்களுக்கு தண்ணீர் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

    தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கும். சரியான நேரத்தில் மழை தொடங்கி ஓரளவுக்கு பெய்தால் மட்டுமே மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

    Next Story
    ×