search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வின் எண்ணங்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர்: செல்லூர் ராஜு பேட்டி
    X

    தி.மு.க.வின் எண்ணங்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர்: செல்லூர் ராஜு பேட்டி

    மதுரை மண்டலத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம், தி.மு.க.வின் எண்ணங்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
    மதுரை:

    போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பஸ்களை சீராக இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பஸ்களை இயக்குவது தொடர்பாக, அமைச்சர் செல்லூர் ராஜு, கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் புறவழிச்சாலை பணிமனையில், அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு இடையூறு தரவேண்டும், அம்மா அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் விஷமங்களை தூவி அரசியல் நடத்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களின்  தீய எண்ணம் மற்றும் நோக்கங்களை புரிந்த தொழிலாளர்கள் அரசுக்கு உதவியாக இங்கு பஸ்களை இயக்குகிறார்கள்.
    இதனால் மதுரை மண்டலத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன. 100 சதவீத பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. அனைத்து பஸ் நிலையங்கள், பணி மனைகளுக்கு சென்று வந்தேன். வழக்கம்போல் நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தி.மு.க.வின் எண்ணங்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். மக்கள் விரோத செயல்களை செய்யும் அவர்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். தி.மு.க.வுக்கும் அதற்கு துணை போகும் கட்சிகளுக்கும், மக்களிடம் எந்த காலத்திலும் ஆதரவு கிடைக்காது.

    போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பான  சூழல் இருக்குமா? போக்கு வரத்து தொழில் நடக்குமா?  என்கிற நிலைப்பாடு தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்தது.  அதனை மாற்றிக்காட்டியவர் ஜெயலலிதா. 2011-ல் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தி டீசலுக்கு மானியம் வழங்கி, ஊழியர்களின் பணி நிரந்தரத்தை உறுதிப்படுத்தினார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தான், போக்குவரத்து ஊழியர்களுக்கு அங்கீகாரம்  மற்றும் பாதுகாப்பு கிடைத்தது. அதனை உணர்ந்து மற்ற கட்சிகளின் எண்ணங்களுக்கு துணை போகாமல் அரசுக்கு ஆதரவாக மக்களுக்கு துணையாக பஸ்களை தொழிலாளர்கள் இயக்கி  வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் இதனை வரவேற்கின்றனர். கடமைக்கு வராத தொழிலாளர்கள் மாலைக்கு பிறகு வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×