search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கீழ்ப்பாக்கத்தில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட 1.5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி கொள்ளை
    X

    கீழ்ப்பாக்கத்தில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட 1.5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி கொள்ளை

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் காரில் எடுத்து செல்லப்பட்ட 1.5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் சவுகார்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கார் டிரைவராக ஆவடி நந்தவன பூம்புகார் தெருவை சேர்ந்த வெங்கடராமன் பணியாற்றி வருகிறார்.

    நேற்றுமுன்தினம் பிரவீன், வெங்கடராமனிடம் 1.5 கிலோ தங்க நகை மற்றும் 5 கிலோ வெள்ளி நகையை அமைந்தகரையில் உள்ள தனது வீட்டில் கொண்டு சேர்க்குமாறு கூறினார்.

    அதன்படி வெங்கடராமன் கார் மூலம் தங்க, வெள்ளி நகைகளை எடுத்து சென்றார்.

    இந்தநிலையில் கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலை அருகே வந்த போது நகைகள் கொள்ளை போய் விட்டதாக, கடையின் உரிமையாளர் பிரவீனிடம், வெங்கடராமன் செல்போனில் தகவல் கொடுத்தார்.

    அதிர்ச்சியடைந்த பிரவீன் உடனடியாக போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கும்படி வெங்கடராமனிடம் தெரிவித்தார். அதன்பேரில் வெங்கடராமன் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகார் மனுவில், ‘சவுகார்பேட்டை நகைகடையில் இருந்து 1.5 கிலோ தங்கம்-5 கிலோ வெள்ளி நகையுடன் அமைந்தகரையில் உள்ள கடையின் உரிமையாளர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். இரவு 10.30 மணியளவில் கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலை அருகே வந்த போது, காரில் வந்த 4 பேர் கும்பல் எனது காரை வழிமறித்து நின்றது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் என்னை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.’ என்று கூறினார்.

    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியில் அரசு உயர் அதிகாரிகள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் கொள்ளை நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

    பிரவீன்குமாரின் நகைகடையில் வெங்கடராமன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரவீன் அவரிடம் நகைகளை கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    சவுகார்ப்பேட்டையில் இருந்து சென்டிரல்-பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக அமைந்தகரைக்கு செல்லாமல், புரசைவாக்கம்- கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை வழியாக வெங்கடராமன் ஏன் காரை ஓட்டி சென்றார்? என்ற கேள்வி போலீசாரிடம் எழுந்துள்ளது.

    எனவே வெங்கட்ராமன் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு, நாடகமாடுகிறாரோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய செல்போனில் யார்-யாருடன் தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என்பது குறித்த தகவலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.41 லட்சத்து 34 ஆயிரம், வெள்ளி நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் ஆகும்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    Next Story
    ×