search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 185 பேர் கைது
    X

    கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 185 பேர் கைது

    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 185 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. கேரள அரசு கட்டும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக்கோரி ம.தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

    முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    ரெயில் நிலையத்திற்குள் புகுந்து மறியலுக்கு ம.தி.மு.க. வினர் முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ம.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது தணிக்கை குழு செயலாளர் அரங்கசாமி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை மீட்டு ரெயில் நிலையத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் முதலுதவி அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் குறித்து முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    பவானி ஆறு மூலம் தமிழகத்தில் 3½ லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பாசனவதி பெறுகின்றன.

    இந்தநிலையில் பவானியில் தடுப்பணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும். எனவே மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    முல்லை பெரியாறு, காவிரி, பாம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை கட்டி நம்மை சுற்றி உள்ள மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் வழங்கிய தீர்ப்பின்படி எந்த ஒரு மாநிலமும் தமிழகத்தின் அனுமதியில்லாமல் தடுப்பணை கட்டக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

    தீர்ப்பின் படி மத்திய அரசு பவானி ஆற்றில் கேரள கட்டி வரும் தடுப்பணை பணியை உடனே நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 185 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×