search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரத்தில் வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை தாக்கி 32 பவுன் நகை கொள்ளை
    X

    மாதவரத்தில் வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை தாக்கி 32 பவுன் நகை கொள்ளை

    மாதவரத்தில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை தாக்கி 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    செங்குன்றம்:

    மாதவரத்தில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை தாக்கி 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னையை அடுத்த மாதவரம் தபால்பெட்டி கே.கே.ஆர். கார்டன் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 52). இவர், பெரம்பூரில் ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நீலவேணி(48).

    இவர்களுக்கு பானுப்பிரியா (21) என்ற மகளும், யுவராஜ்(15) என்ற மகனும் உள்ளனர். பானுப்பிரியா பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். யுவராஜ், தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நீலவேணியின் அக்காள் கணவர் தனசேகர்(55). சென்னை பெருங்குடியை சேர்ந்த இவர், பெரம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் நீலவேணி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    பானுப்பிரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வீட்டில் நகைகள் வாங்கி வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை விஜயகுமார், அவருடைய மகள் பானுப்பிரியா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். யுவராஜ் பள்ளிக்கு சென்று விட்டார். தனசேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதியம் சாப்பிடுவதற்காக விஜயகுமார் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய 3 மர்மநபர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் விஜயகுமார் வீட்டுக்குள் புகுந்தனர். திடீரென வீட்டில் இருந்த விஜயகுமார் தலை மற்றும் கையில் பட்டாக்கத்தியால் வெட்டினர். இதில் அவர் சரிந்து விழுந்தார். பின்னர் தனசேகர், நீலவேணி இருவரையும் தாக்கிய மர்மநபர்கள், 3 பேரின் கைகளையும் பின்புறமாக கட்டினர். சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து அடைத்தனர்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்த மர்மநபர்கள், அதில் பானுப்பிரியாவின் திருமணத்துக்காக வாங்கி வைத்து இருந்த 32 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். நீலவேணியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் தடுத்ததால் ஆத்திரத்தில் பட்டாக்கத்தியை பின்புறமாக பிடித்து அவரது தோள் பட்டையில் ஓங்கி வெட்டினர். இதில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்காமல் 32 பவுன் நகை மற்றும் 3 பேரிடம் இருந்த செல்போன்களையும் பறித்து விட்டு, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    3 பேரின் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டதால் அவர்களால் கதவை திறந்து கூச்சல் போட முடியவில்லை. ஒரு வழியாக நீலவேணி தனது கை கட்டை அவிழ்த்தார். பின்னர் விஜயகுமார், தனசேகர் கை கட்டையும் அவிழ்த்து விட்டு ஜன்னலை திறந்து கூச்சலிட்டார். இவர்கள் வசிப்பது தனி வீடு என்பதாலும் அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதாலும் யாரும் வரவில்லை. செல்போனையும் பறித்து சென்று விட்டதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை.

    சுமார் 2 மணிநேரம் பூட்டிய வீட்டுக்குள் தவித்தனர். அதன்பிறகு இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து 3 பேரையும் மீட்டனர். காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுபற்றி மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அந்த தெருவின் முனையில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆராய்ந்தனர். அதில் மர்மநபர்கள் 3 பேரும் பதிவு எண் இல்லாத ஒரே மோட்டார் சைக்கிளில் வருவதும், கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி உள்ளது.

    அந்த காட்சிகளை வைத்து பழைய குற்றவாளிகள் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனரா? என அவர் களின் புகைப்படங்களை வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
    Next Story
    ×