search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமி‌ஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்த தொழில் அதிபர்
    X

    கமி‌ஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்த தொழில் அதிபர்

    பழைய ரூபாய் நோட்டை மாற்ற கமி‌ஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு தொழில் அதிபர் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் விஜயராஜ். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவரது நண்பர்கள் பாலா மற்றும் ராஜேஷ்.

    பாலா தனது நண்பர் கொருக்கம்பாக்கத்தை சேர்ந்த செல்வத்திடம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்துக்கு கொடுத்தால் அதற்கு பதிலாக பழைய 500 ரூபாய் நோட்டுகள் 5 லட்சத்து 40 ஆயிரம் தருவதாக விஜயராஜிடம் கூறினார்.

    இதை நம்பிய விஜயராஜ் தனக்கு 40 ஆயிரம் கூடுதலாக கிடைக்கிறது என்ற ஆசையில் நேற்று புதிய ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்துடன் தனது நண்பர்கள் ராஜேஷ், பாலாவுடன் காரில் குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு காரை நிறுத்தி விட்டு ரூ.5 லட்சத்துடன் தயாராக இருந்தார்.

    அப்போது செல்வம் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். பின்னர் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் இருப்பதாக கூறி ஒரு பையை கொடுத்து விட்டு விஜயராஜிடம் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்தை பெற்றனர்.

    உடனே விஜயராஜ் செல்வம் கொடுத்த பையை திறந்து பார்த்தார். அதில் பணம் இல்லை. கற்கள் இருந்தது. இதுகுறித்து விஜயராஜ், ராஜேஷ், பாலா ஆகியோர் செல்வத்திடம் தட்டி கேட்டனர். அப்போது செல்வத்துடன் வந்த 6 பேர் உருட்டு கட்டையால் 3 பேரையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து விஜயராஜ் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்வத்தின் செல்போன் மூலம் துப்பு துலங்கியது. அவரது செல்போன் மூலம் மர்மகும்பல் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மர்ம கும்பலை பிடிக்க குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் ரூபன் தலைமையில் தனிப்படை புதுச்சேரிக்கு விரைந்து உள்ளது. மேலும் பாலாவிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    ரூ.40 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×